மட்டக்களப்பு கிணற்றிலிருந்து உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம்!
மட்டக்களப்பு கிணற்றில் உயிர் தப்பிய பெண்ணின் திகில் அனுபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
இந்நிலையில் அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் விளக்கமளித்தார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், நான் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன் வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வயோதிபப் பெண்ணும் பேருந்துக்காகக் காத்திருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு முச்சக்கரவண்டி எங்களை எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டது. நான் மட்டக்களப்பு நகருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, எம்மை ஏறுமாறு கூறினார். என்னிடம் போதிய பணம் இல்லை என்று கூறியபோது, 100 ரூபா மட்டும் தருமாறு கூறினார்.
அதனை ஏற்று நானும் அந்த வயோதிபப் பெண்ணும் அதில் ஏறினோம். முச்சக்கரவண்டி நகரை நோக்கிச் சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கிக்கொண்டார்.
பின்னர், என்னை எங்கு விட வேண்டும் என்று கேட்டபோது, சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு கூறினேன். அங்கு என்னை இறக்கிவிடும்போது, அந்த முச்சக்கரவண்டியில் இருந்த ஒரு பெண், தான் சேலை எடுக்கப் போவதாகவும், அதுவரை தன்னுடன் வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார்.
நான் சேலை கடைக்கு முன்னால் காத்திருப்பதாகக் கூறினேன். நான் குழந்தையுடன் அருகிலிருந்த நகைக்கடைக்குச் சென்று, அடகு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபா செலுத்தி மீட்டுக்கொண்டேன்.
மீண்டும் அந்தப் பெண் சொன்ன கடைக்கு வந்தபோது, அவர் முச்சக்கரவண்டி ஓட்டுநருடன் தொலைபேசியில் பேசிவிட்டு, எங்களை மணிக்கூட்டுக் கோபுரப் பகுதிக்கு வருமாறு கூறினார்.
நானும் அந்தப் பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிச் சென்று, மீண்டும் அதே முச்சக்கரவண்டியில் ஏறினோம். தொடர்ந்து முச்சக்கரவண்டி பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று ஓரிடத்தில் நின்றது.
அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய வீதியூடாக வவுணதீவு நோக்கிப் பயணித்தது. வலையிறவுப் பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பெண் மூன்று குளிர்பானப் போத்தல்களை வாங்கினார்.
எனது மகளுக்கும் அவருக்கும் பச்சை நிறக் குளிர்பானத்தையும், எனக்கு விளாம்பழக் குளிர்பானத்தையும் தந்தார். நான் அதனை அருந்தினேன். வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார்.
அதன் பின்னர், ஒரு இளைஞன் கையில் கத்தியுடன் அந்த முச்சக்கரவண்டியில் ஏறினார். அவர் ஏன் கத்தியுடன் ஏறுகிறார் என்று நான் கேட்டபோது, மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் செல்வதாகக் கூறினர்.
நான் என்னை தாண்டியடியில் இறக்கிவிடுமாறு கேட்டபோது, அதற்குச் சம்மதித்தனர். ஆனால், முச்சக்கரவண்டி கன்னங்குடா சந்தியூடாகத் தாண்டியடி நோக்கிச் செல்லாமல், பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கிச் சென்றது.
ஏன் இந்த வீதியில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாகக் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன்.
நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது. “வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?” என்று குழப்பமடைந்தேன்.
தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன். இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், “அம்மா, அம்மா” என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். “மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?” என்று கத்தினேன்.
அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன். அப்போது யாரோ சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினர் என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
