வாகன இறக்குமதி தொடர்பான புதிய தகவல்
புள்ளிவிபரங்கள் மற்றும் சந்தைத் தரவுகளின் அடிப்படையில், 2025 ஆம் ஆண்டில் மொத்தமாக 64,556 கார்கள் மற்றும் SUV வகை வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதில் 6,439 வாகனங்கள் முழுமையான மின்சார வாகனங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மொத்த இறக்குமதியில் 29 வீதம் அல்லது 18,709 வாகனங்கள் கலப்பின (Hybrid) வாகனங்களாக உள்ளன.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிக விலை கொண்ட சொகுசு மின்சார வாகனங்களுக்கு அதிக தேவை காணப்பட்ட நிலையில், ஆண்டின் நான்காவது காலாண்டில் பொதுமக்களின் கவனம் மலிவு விலை மின்சார வாகன பிராண்டுகள் நோக்கி திரும்பியுள்ளதாக சந்தை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதற்கிடையில், மின்சார வாகனங்களை ஏற்றுக்கொள்வதில் இலங்கை பல அண்டை நாடுகளை விட முன்னிலையில் இருப்பதாக ஸ்பார்க்வின் (Sparkwin) ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கிறது. 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, மின்சார வாகனங்களின் பங்கு இலங்கையில் 10 வீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் 2–3 வீதம், மலேசியாவில் 5 வீதம், தாய்லாந்தில் 15 வீதம் மற்றும் சிங்கப்பூரில் 43 வீதமாக உள்ளது.
தற்போதைய மின்சார வாகன உரிமையாளர்கள், இந்த தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சியை உணர்ந்த “ஆரம்பகால பயனர்கள்” என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். 2026 ஆம் ஆண்டில் நடுத்தர அளவிலான கார் வாங்குபவர்களிடையிலும் மின்சார வாகனங்கள் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தப் போக்கை மேலும் வலுப்படுத்துவதற்கு நாட்டளவில் வலுவான மற்றும் பரவலான மின்னேற்ற (Charging) உள்கட்டமைப்பை உருவாக்குவது அத்தியாவசியம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
.jpeg)