கரூர் விவகாரம்: 2ஆவது முறையாக விசாரணைக்காக முன்னிலையான த.வெ.க தலைவர் விஜய்
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக பலரிடம் விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 12ஆம் திகதி த.வெ.க தலைவர் விஜய்யிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் தொடர்பாக சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 100க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
முதற்கட்ட விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் இன்று (19) டெல்லியில் முன்னிலையாகுமாறு விஜய்க்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி, சி.பி.ஐ. விசாரணைக்காக 2ஆவது முறையாக த.வெ.க தலைவர் விஜய் நேற்று மாலை 4 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று அவர் மீண்டும் விசாரணைக்காக முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
