நுவரெலியாவில் உறைய வைக்கும் பனி; நாட்டின் பல பகுதிகளில் குறைந்த வெப்பநிலை பதிவு

 


இலங்கையில் இன்று (21.01.2026) அதிகாலையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 7.4°C ஆக இருந்ததாக நுவரெலியா வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இன்று காலை பண்டாரவளை பகுதியில் 11.5°C, பதுளை பகுதியில் 15.2°C என்ற குறைந்தபட்ச வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வானிலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதிகாலையில் மஹஇலுப்பல்லம பிரதேசத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.4°C ஆகவும், அனுராதபுரம் பகுதியில் இன்று காலை 18.6°C ஆகவும் பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நிலவும் குளிரான காலநிலையால் மலைநாட்டுப் பகுதிகளில் பனி மற்றும் குளிர் அதிகரித்துள்ளதாகவும், மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.