கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
கடற்றொழிலாளர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில், அதிக நன்மைகளை வழங்கக்கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையுடன் இணைந்து செயல்படுத்தியுள்ளது.
கடற்றொழிலாளர்களின் வருமான நிலை மற்றும் தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப தங்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடிய வசதி வழங்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாகும்.
இதன் மூலம், கடற்றொழிலாளர்கள் 60 வயதை எட்டிய பின்னர் மாதந்தோறும் ரூ.5,000, ரூ.10,000, ரூ.15,000, ரூ.20,000, ரூ.25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையை ஓய்வூதியமாகப் பெறும் வகையில் இந்தத் திட்டத்தில் இணைந்து பங்களிக்க முடியும்.
மேலும், 60 வயதிற்குப் பிறகு வயது அதிகரிக்கும் போதெல்லாம் பெறப்படும் ஓய்வூதியத் தொகையும் அதிகரிப்பதாக இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஒருவர் ரூ.1,000 ஓய்வூதியத் திட்டத்திற்கு பங்களிப்பு செய்தால்,64 முதல் 70 வயது வரை மாதந்தோறும் ரூ.1,250, 71 முதல் 77 வயது வரை ரூ.2,000, 78 வயதிற்குப் பின்னர் ரூ.5,000 என மாதாந்த ஓய்வூதியமாகப் பெற முடியும்.
மேலதிக நன்மையாக, இத்திட்டத்தில் இணைந்திருப்பவர்களுக்கு ஆயுள் காப்புறுதி வசதியும் வழங்கப்படுகிறது. மேலும், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால், அந்த ஓய்வூதியத் தொகையை அவரது மனைவி அல்லது கணவர் தொடர்ந்து பெற்றுக்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடற்றொழிலில் நேரடியாக ஈடுபடுபவர்கள் மட்டுமல்லாமல், கடற்றொழில் சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடுபவர்களும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
