பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்: காற்றின் தரத்தில் சரிவு – அவதானம் அவசியம்

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரத்தில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவரது தெரிவிப்பின்படி, நேற்று (18) முதல் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள், மேலும் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்று தர குறியீடு 150 முதல் 200 வரையிலான அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலைமை ஓரளவு சாதகமற்றதாக கருதப்படுவதுடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் காற்றின் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச எல்லைகளைத் தாண்டிய காற்று சுழற்சி இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும், அதே நேரத்தில் மனித செயல்பாடுகளும் காற்று தரம் குறைவதற்கு பங்களிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, தீப்பற்றல்கள், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் போன்ற பொருட்களை எரித்தல் இவை காற்று மாசுபாட்டை அதிகரிக்கும் முக்கிய காரணங்களாகும்.

காற்று தர சரிவு, மூச்சுத் திணறல், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளுக்கு உணர்திறன் கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.