ஒவ்வொரு இரண்டு நிமிடங்களிலும் கர்ப்பப்பை புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பு!


கர்ப்பப்பை புற்றுநோயை முழுமையாக ஒழிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு உலகின் 194 நாடுகள் இணைந்து ஒரு உலகளாவிய செயல் திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இதனை நினைவுகூரும் வகையில், நவம்பர் 17 ஆம் தேதி தற்போது உலக கர்ப்பப்பை புற்றுநோய் ஒழிப்பு நாள் ஆகக் கடைபிடிக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டிய முக்கிய இலக்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி,


15 வயதிற்குள் 90 சதவீத சிறுமிகளுக்கு HPV தடுப்பூசி வழங்குதல்,


35 மற்றும் 45 வயதுகளில் 70 சதவீத பெண்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளுதல்,


மேலும் நோய் கண்டறியப்படும் பெண்களில் 70 சதவீதருக்கு முழுமையான சிகிச்சை வழங்குதல் ஆகியவை முக்கிய இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இலக்குகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், 2120 ஆம் ஆண்டுக்குள் 7.4 கோடி புதிய கர்ப்பப்பை புற்றுநோய் சம்பவங்களைத் தவிர்க்கவும், 6.2 கோடி உயிர்களை காப்பாற்றவும் முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மதிப்பீடு செய்துள்ளது.

இதனிடையே, உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் ஆகிய சர்வதேச அமைப்புகள், கர்ப்பப்பை புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதுடன், தடுப்பூசி மற்றும் பரிசோதனை வசதிகள் அனைத்து பெண்களுக்கும் சமமாக கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.