வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்
வாகன போக்குவரத்து சட்டங்களை மீறும் சாரதிகளுக்கு குற்றப் புள்ளிகள் வழங்கும் முறைமை, எதிர்வரும் ஜூலை மாதத்தின் இறுதிப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வாகன போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
GovPay ஊடாக அபராதத் தொகைகளை செலுத்தும் முறைமை நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் நிலையில், அதனுடன் இணைந்து இந்த குற்றப் புள்ளி முறைமையும் அமல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேகாலையில் நடைபெற்ற பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும், போதைப்பொருள் தாக்கத்தின் கீழ் வாகனம் செலுத்திய சாரதிகளுக்கு எதிராக 2026 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிவதற்காக புதிய பரிசோதனை கருவி ஒன்றை பொலிஸ் மா அதிபர் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் தேவையற்ற உபகரணங்களை அகற்றாமல் இயக்கும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.