டிட்வா சூறாவளி தாக்கத்தால் அதிகரிக்கும் இருதய நோய்!


டிட்வா சூறாவளியின் தாக்கம், தனிநபரின் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களை 40 சதவீதமாக அதிகரிக்கும் என்று விசேட மருத்துவ நிபுணர் எச்சரித்துள்ளார். 

இதனைச் சர்வதேச ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக, இருதய நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் கோத்தபாய ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், பேரிடரின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், வீடுகளை இழத்தல் மற்றும் அன்பானவர்களை இழத்தல் போன்ற உளவியல் தாக்கங்கள், ஒரு சிலருக்கு நாளடைவில் இருதய நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக அமையலாம். 

இந்த உளவியல் அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத் துடிப்பை வேகப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன், குருதியழுத்தம், நீரிழிவு, அதிக எடை உள்ளிட்ட நோய் நிலைமைகளால் அவதிப்படும் நாட்பட்ட நோயாளர்கள், மருந்துகளை உரியவாறு பெறவில்லை எனில், அது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விசேட மருத்துவ நிபுணர் குறிப்பிட்டுள்ளார். 

மோசமான தூக்கம், பாதுகாப்பு முகாம்களில் தங்கியிருத்தல் மற்றும் பதற்றம் காரணமாகத் தூக்கமின்மை ஏற்படுவது, இருதயச் செயற்பாட்டைச் சீர்குலைப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

மேலும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்குத் திரும்புவதும் இதயநோய் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.