ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பேருந்து பயணிகளுக்கான விசேட அறிவிப்பு!


ரயில் பருவகால சீட்டுக்களை பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தற்போது சேவை தடைப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அனுமதிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 

ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும் பகுதிகளில் உள்ள நபர்களும் புகையிரத பருவகால சீட்டுக்களைப் பயன்படுத்தி  பேருந்துகளில் பயணிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால், இது தொடர்பில் மீண்டும் வலியுறுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி வரும் ரயில் பயணிகளுக்காக நாளை (8) அதிகாலை முதல் விசேட பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அந்த விசேட பேருந்துகளில் புகையிரத பருவகால சீட்டைப் பயன்படுத்தி பயணிக்கும் வசதி உள்ளதாக அதன் தலைவர்  பி.ஏ. சந்திரபால தெரிவித்தார். 

இதேவேளை, பேராதனை பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.