டிட்வா சூறாவளி காரணமாக அழிந்த நெற்பயிர்கள்; சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு!


'டிட்வா' சூறாவளி காரணமாக நெற்பயிர்கள் அழிவடைந்துள்ளமையால், வரும் காலங்களில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என வர்த்தக, வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். 

அழிவடைந்த நெற்காணிகளில் மீண்டும் பயிர்ச் செய்கை முன்னெடுக்கப்பட்டால், சிவப்பு அரிசி மற்றும் நாடு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது.

சம்பா மற்றும் கீரி சம்பா நெல்லினம் அறுவடைக்கு நான்கு மாதங்கள் எடுக்கும். 

ஆனால், தற்போது மறுபயிரிடுவதற்கு மூன்றரை மாத கால எல்லைக்குள் பலன் தரக்கூடிய சம்பா அல்லது கீரி சம்பா விதை நெல்லினங்கள் கைவசம் இல்லை என அவர் குறிப்பிட்டார். 

மேலும் நெற்செய்கை மாத்திரமன்றி, சோளம், நிலக்கடலை மற்றும் பச்சை மிளகாய் போன்ற ஏனைய பயிர்களும் பாரியளவில் நாசமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

அவற்றில் 10,000 ஹெக்டேயர் சோளப் பயிர்ச் செய்கை, 2,011 ஹெக்டேயர் நிலக்கடலைச் செய்கை மற்றும் 1,188 ஹெக்டேயர் பச்சை மிளகாய்ச் செய்கை பாரியளவில் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

குறிப்பாக, சோளம் போன்ற பயிர்களை மீண்டும் இந்த பருவத்தில் பயிரிட முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.