தேநீர் குடிக்க பஸ்ஸிலிருந்து கீழே இறங்கியவர்கள் மீது மோதிய லொறி!


நுவரெலியா பத்தனை பகுதியில் தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து கீழே இறங்கிச் சென்ற இருவர் மீது லொறி மோதி இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (20) காலை இடம்பெற்றுள்ளது. 

டயகம பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் தேநீர் குடிப்பதற்காக பத்தனை பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. 

அந்த சந்தர்ப்பத்தில் தேநீர் குடிப்பதற்காக பஸ்ஸிலிருந்து இறங்கி சென்ற இளைஞன் உட்பட இருவர் மீது வேகமாக எதிர் திசையில் இருந்து பயணித்த லொறி மோதியதால் ஒருவர்  ஸ்தலத்திலேயே  உயிரிழந்துள்ளதோடு,

இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவர் வட்டவளை  பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார். 

நாத்தாண்டிய பகுதியில் இருந்து  நுவரெலியா நோக்கி, அரிசி ஏற்றிச் சென்ற லொறி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

இது தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.