இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் துல்லியமான தரவுகள் அவசியம்! - ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
பொருளாதார முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகள் மிகவும் முக்கியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மாத்தளை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி, இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தத்தால் சேதமடைந்த பயிர் நிலங்களுக்கு இழப்பீடு வழங்கும் பணியை டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இழப்பீட்டுத் தொகையை மிகவும் தகுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய வகையில் துல்லியமான தரவுகளை வேறுபடுத்திக் கண்டறியுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் அரிசி மேலதிகக் கையிருப்பு இருப்பதாக விவசாய திணைக்களம் தரவுகளை வழங்கிய போதிலும், அரிசி பற்றாக்குறையை எதிர்நோக்க நேரிட்டதை ஜனாதிபதி இதன்போது நினைவு கூர்ந்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் சுமார் 500 குடும்பங்கள் ஒரு வாரமாக குடிநீர் இல்லாமல் இருப்பதும் தொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது வெளிக்கொணரப்பட்டது.
இந்த விடயம் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களையும் ஒருங்கிணைந்து, தற்போதுள்ள தடைகளை நீக்கி, மக்களுக்கு உடனடியாக நீர் விநியோகத்தை வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
