நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் சேதமடைந்த 764 மதத் தலங்கள் - சுத்திகரிக்க கொடுப்பனவு!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக விகாரைகள், ஆலயங்கள், மசூதிகள் உட்பட 764 மதத் தலங்கள் பகுதியளவும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
379 விகாரைகள், 165 கோவில்கள், 63 தேவாலயங்கள் மற்றும் 157 மசூதிகள் சேதமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பேரிடர் சூழ்நிலை காரணமாக பல மாவட்டங்களில் 18 கலாசார மையங்களும் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
அனைத்து மதத் தலங்களையும் மீட்டெடுத்து புனரமைக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என்றும், இது பல கட்டங்களில் செய்யப்படும் என்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அனர்த்தத்தினால் சேதமடைந்த விகாரைகள் மற்றும் மதத் தலங்களை சுத்திகரிப்பு செய்வதற்காக கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக 25,000 ரூபாய் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அது தொடர்பில் இந்த வாரம் அமைச்சரவை முடிவு எடுக்கப்படவுள்ளது என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இந்த வருடத்தில் அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்திச் சம்பந்தப்பட்ட அனைத்து மறுசீரமைப்புகளையும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யுமாறும் அந்த நிதி ஒதுக்கீடுகளை மீளத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார்.
