அரசாங்கத்துடனான பணக்கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு!


அடுத்த ஆண்டுக்குள் அரசாங்கத்துடனான அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் இணையவழியில் மேற்கொள்ளும் வசதி பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமான டிஜிட்டல் மயமாக்கல் மூலம், இதுவரை கொழும்பிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிர்வாகச் செயல்பாடுகள் தொலைதூர கிராமங்களுக்குப் பரவலாக்கப்படவுள்ளதாகவும், மக்களுக்கு தேவையான அரச சேவைகளை அருகிலேயே பெறும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தை நேற்று (01) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள இந்த அலுவலகம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள், வட மாகாணத்தின் ஒரே பிராந்திய அலுவலகமான வவுனியாவுக்கு நீண்ட தூரம் பயணம் செய்து குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகளைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

வட மாகாணத்திலிருந்து கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதால், இந்த புதிய அலுவலகம் அந்த சேவைகளை எளிதாக வழங்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்வில், யாழ்ப்பாண மக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகள் வழங்கப்படுவதை குறிக்கும் வகையில் ஜனாதிபதி மூன்று கடவுச்சீட்டுகளை வழங்கினார்.