சருமத்தை வெண்மையாக்க கிறீம்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


சருமத்தை வெண்மையாக்கும் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய மருத்துவமனையின் நிபுணர் கே.டி.சி. பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, பெரும்பாலான சரும வெண்மையாக்கும் பொருட்களில் பாதரசம், ஹைட்ரோகுவினோன் மற்றும் பிற கன உலோகங்கள் அடங்கியுள்ளன. இவை உடலின் மிகப்பெரிய உறுப்பான சருமத்துக்கு மட்டுமன்றி, சிறுநீரகங்கள், மனநலம், மேலும் புற்றுநோய் அபாயம் உள்ளிட்ட தீவிர சுகாதார பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடியவை.

தேசிய விஷக் கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி சுகாதார மற்றும் மருத்துவ மேம்பாட்டுப் பணியகத்தில் “நாம் வெள்ளையாக இருக்க வேண்டுமா? நாம் நோய்வாய்ப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு பேசினார்.

மருத்துவர் மேலும் குறிப்பிட்டதாவது, இந்த வகை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதால் முகப்பரு அதிகரிப்பு, தோல் மெலிதல், இரத்த நாளங்களின் தெளிவான தோற்றம், தோல் இறுக்கம், தேவையற்ற முடி வளர்ச்சி, நிறமாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். பாதரசம் மெலனின் உற்பத்தியை குறைப்பதால், சூரிய கதிர்களால் தோலில் சேதம் அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.

“சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்த்து, தோட்டத்தில் எளிதில் கிடைக்கும் கற்றாழை, வெள்ளை சந்தனம், வெந்தயம் போன்ற இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி சருமத்தை பாதுகாப்பது சிறந்தது” என்று அவர் வலியுறுத்தினார்.