மீண்டும் சைப்பிரசில் இலங்கைத் தூதரகம் திறப்பு!


சைப்பிரசில் இஸ்ரேலியர்கள் காணி வாங்குவது அதிகரித்து வருவதான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஜூலை 20 ஆம் திகதி முதல் சைப்பிரசில் இலங்கைத் தூதரகம் இயங்கவிருப்பதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


இந்தத் தூதரகத்துக்கான உத்தியோகத்தர்கள் 15 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர். சைப்பிரசில் 15,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வசிக்கிறார்கள்.

இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சைப்பிரஸ் தூதரகம் மீண்டும் திறக்கப்படுவதாகத் தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், சைப்பிரசில் இலங்கையருக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் அங்குள்ள இலங்கையரின் நலன்களைக் கவனிக்கவும் முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளவும் இந்தத் தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சைப்பிரஸ் தூதரகம் மூடப்பட்டிருந்ததால் தூதரக விவகாரங்கள் துருக்கியில் இருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தன.