யாழில் குறி சொல்லும் கோவிலில் பலியான குடும்பஸ்தர் ; விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!


யாழ்ப்பாணத்தில் உள்ள குறி சொல்லும் கோவிலில் பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவழி தகவலின்படி, அராலி மத்திய பகுதியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்குச் சென்ற குடும்பஸ்தர், உடல் நலக்குறைவு இல்லாத நிலையிலிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்த சாமியார், அவருக்கு பிணி தீரும் என கூறி இளநீர் ஒன்றை வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த இளநீரை அருந்திய சில நிமிடங்களில், அவர் மயங்கி விழுந்து இடத்திலேயே உயிரிழந்தார்.

உடனடியாக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மரணத்தின் காரணம் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.

மரண விசாரணையின் போது, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரை நாயொன்று கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர் நீர் வெறுப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவரது உடற்கூற்று மாதிரிகள் மேலும் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த நாயால் மேலும் சிலரும் கடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால், அவர்களையும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.