காசாவின் நிலைமைகள் சகிக்க முடியாதது : இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய 3 நட்பு நாடுகள்!
காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை மேலும் மோசமான விதத்தில் விரிவுபடுத்தினால், உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிவரும் என பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டாக எச்சரித்துள்ளன.
பிரிட்டிஸ் பிரதமர் பிரான்ஸ், கனடா தலைவர்கள் இணைந்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுடன், இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும், மனிதாபிமான உதவிகள் காசாவிற்குள் செல்வதற்கு உடனடியாக அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் 11 வார கால முற்றுகை மற்றும் தடையின் பின்னர் அடிப்படை எண்ணிக்கையிலான உணவுகளை காசாவிற்குள் அனுமதிக்கும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
எனினும் இது போதுமானதல்ல என தெரிவித்துள்ள மூன்று நாடுகளும் பொதுமக்களிற்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது இது சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறுவதற்கு ஒப்பானது என தெரிவித்துள்ளன.
காசாவில் காணப்படும் துன்பத்தின் அளவு சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளது என தெரிவித்துள்ள அவர்கள், ஹமாஸ் தன்னிடம் எஞ்சியுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.