மின் கட்டணம் 18 % அதிகரிப்பு : இறுதித் தீர்மானம் அடுத்த மாதம்!


மின் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவிடம் அனுமதி கோரியுள்ளது.

நூற்றுக்கு 25 முதல் 35 சதவீதத்துக்கிடையில் மின் கட்டணத்தை அதிகரிக்க இதற்கு முன்னர் மின்சார சபை தீர்மானித்திருந்தபோதும், சந்தை விலைக்குக் குறைவாக எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எரிபொருள் கூட்டுத்தாபனம் விருப்பம் தெரிவித்துள்ளதன் காரணமாக மின் கட்டணத்தை 18.3 சதவீதத்தால் மாத்திரம் அதிகரிக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.

மின் உற்பத்திக்காக நெப்தா மற்றும் எச்.எவ்.ஓ. ஆகியவற்றை சந்தை விலைக்கும் குறைவாக முறையாக 09 ரூபா மற்றும் 10 ரூபா என்ற விலையின் அடிப்படையில் கடந்த 15ஆம் திகதியிலிருந்து மின்சார சபைக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்க எரிபொருள் கூட்டுத்தாபனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று உமா ஓயா வேலைத்திட்டத்துக்குச் செலுத்தவேண்டிய கட்டணம் ஒருவருடம் காலதாமதப்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் மின்சார சபை மின் கட்டணத்தை அதிகரிக்கும் யோசனையை சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பிவைப்பதற்காக அதனை நிதி அமைச்சுக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றது.

உத்தேச கட்டணத் திருத்தம் தொடர்பில் கருத்துக் கணிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்வரும் 03ஆம் திகதி மக்கள் கூட்டமொன்றை நடத்தவுள்ளதுடன், அந்த யோசனைக்கான அனுமதி எதிர்வரும் ஜூன் மாத இறுதி அரைப்பகுதியில் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் மின்கட்டணத்தை 20 சதவீதத்தால் குறைத்ததன் பின்னர் முதலாம் காலாண்டில் இலங்கை மின்சார சபை 18 பில்லியன் நட்டத்தைச் சந்தித்துள்ளதுடன், மே மாதத்தில் 25 பில்லியன் ரூபா வரையில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மீளாய்வு நிறைவேற்றுக் குழுவின் அனுமதிக்கும் தாமதத்தை ஏற்படுத்துவதற்கான காரணமாகவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின் கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன் காரணமாக செலவுக்கேற்ற சுய மின் கட்டண சூத்திரத்தை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் இலங்கை அதிகாரிகளுக்குச் சுட்டிக்காட்டியிருந்தது.

இதேவேளை, செலவுக்கேற்ற கட்டண முறை தொடர்பில் பல தரப்புகளுக்கிடையில் இணக்கம் ஏற்படாமை மற்றும் தேவையற்ற தலையீடு காரணமாக கடந்த 09ஆம் திகதியிலிருந்து மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய அவரின் பதவியிலிருந்து விலகியதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இருந்தபோதும் மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சியம்பலாப்பிட்டிய அவரின் பதவியை இராஜிநாமாச் செய்யவில்லை என்றும் விடுமுறையில் அவர் வெளிநாடு சென்றுள் ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கமைய, மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால மின்சார சபையின் பதில் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய, மின் கட்டணத்தை 18.3 சத வீதத்தால் அதிகரிப்பதற்கு மின்சார சபையால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இறுதித் தீர்மானம் ஜூன் மாதம் முதலாவது வாரத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.