ஜனாதிபதி அனுர தலைமையில் 16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் இன்று!


ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் இன்று திங்கட்கிழமை (19) அனுஷ்டிக்கப்படவுள்ளது.

கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின் தலைவர் ஓய்வு பெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதில் தன்னலமின்றி பணியாற்றியவர்களை கௌரவித்து நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. நாட்டிலுள்ள மார்ஷல் பதவி நிலைகளை வகிக்கும் முன்னாள் படைத்தளபதிகள் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்கவுள்ளனர்.

அதற்கமைய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த முப்படைகளின் துணிச்சல்மிக்க  வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இந்த வருடாந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.