ஊடகவியலாளர்களை குறி வைக்கும் இஸ்ரேல்!
இன்று காலை (07) தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலால் ஊடகவியலாளர் அஹ்மத் மன்சூர் உயிருடன் எரிக்கப்பட்டார். இவர் ஒரு தந்தை மற்றும் பலஸ்தீன டுடே பத்திரிகையாளர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணையத்தில் பரவி வரும் குறித்த ஊடகவியலாளர் உயிருடன் எரிக்கப்படும் வீடியோக்களில், தீயால் சூழப்பட்ட கூடாரத்தை அணைக்க பலஸ்தீனியர்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் போராடும் அதிர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவம் பத்திரிகையாளர் பாதுகாப்பு குறித்து எழும் கேள்விகளை மீண்டும் முன்வைத்துள்ளது. சுதந்திர ஊடகத் தர்மத்திற்கு இது ஒரு பெரும் இடியென கூறப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலால் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், 07 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காசாவில் இனப்படுகொலை தொடங்கியதிலிருந்து, செய்தி சேகரிக்கும் பலஸ்தீன பத்திரிகையாளர்களை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கான அணுகலை இஸ்ரேல் தடுத்து வருகிறது.
2023 அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட காசா மீதான போர் தொடங்கியதிலிருந்து, 210 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.