உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப் : அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பாரிய போராட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகளவில் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இவரது கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அமெரிக்காவிற்குள் மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. ட்ரம்பின் செயல்களுக்கு எதிராக அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வொஷிங்டன், நியூயோர்க், ஹூஸ்டன், ப்ளோரிடா, கொலராடோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வர்த்தக வரி விதிப்பு, அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு, மக்களின் சுதந்திரத்தை குறைக்கும் நடவடிக்கைகள் என பல்வேறு செயல்களில் ட்ரம்ப் தனக்கு விருப்பமான முறையில் செயல்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப் மீது, இதுவரை முன்னெடுக்கப்பட்ட பெரிய எதிர்ப்புப் போராட்டமாக இந்த நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.
‘ஹென்ட்ஸ் ஒப்’ எனப்படும் குழுவினர் ஏற்பாடு செய்த இந்த நாடுதழுவிய போராட்டம், அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 1200க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இதில், சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்தனர். குறிப்பாக, அமெரிக்காவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு எதிரான வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட சில தினங்களுக்குள் இந்த போராட்டம் தொடங்கப்பட்டது.
பொஸ்டனில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மீதான கைதுகள் மற்றும் நாடு கடத்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் தங்களைக் கவலையடையச் செய்துள்ளதாகக் கூறினர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில், ட்ரம்ப் எந்தவொரு பொது நிகழ்விலும் பங்கேற்காமல், புளோரிடாவில் உள்ள தனக்குச் சொந்தமான ஒரு ரிசோர்ட்டில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தார் என்ற தகவலையும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டன.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ட்ரம்பின் தீர்மானங்கள் அமெரிக்காவின் நட்பு நாடுகளோடு உறவுகளை பாதிக்கக்கூடியவை என்றும், அவரின் நிர்வாகம் நாட்டின் ஜனநாயக அடிப்படைகளை நசுக்கக்கூடியது என்றும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது இந்த போராட்டத்தின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தகக் கொள்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ட்ரம்பின் நிலைப்பாடு தெளிவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அவர், தகுதியான பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவி வழங்கும் உறுதியைக் கொண்டுள்ளார் எனவும், ஜனநாயகக் கட்சியினர் சட்டவிரோத குடியேறிகளுக்கு அந்த நலத்திட்டங்களை வழங்க விரும்புவதால் அமெரிக்க குடிமக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.