உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்கள் பெறுபேற்று அட்டவணையை தரவிறக்கம் செய்யவும் பார்ப்பதற்கும் வசதிகள்
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் இன்று, ஏப்ரல் 28ஆம் தேதி முதல் தங்களுடைய பெறுபேறு அட்டவணைகளை தரவிறக்கம் செய்யவும் பார்வையிடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக, விண்ணப்பதாரர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்துக்குச் சென்று, தங்களுடைய தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளிட்டு பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளங்களான http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk ஆகியவற்றின் மூலமும் பெறுபேறுகளை பார்க்க முடியும்.
இதேவேளை, பாடசாலை அதிபர்கள் தங்களுக்காக வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் https://onlineexams.gov.lk/eic இணையதளத்துக்குள் நுழைந்து உரிய பாடசாலைகளின் பெறுபேறு அட்டவணைகளை தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம். அதேபோல், அனைத்து மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி தங்களது மாகாணம் மற்றும் பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளின் பெறுபேறுகளை தரவிறக்கம் செய்து பார்வையிட முடியும்.
பரீட்சை பெறுபேறு அட்டவணை மீளாய்வுக்குப் பின் இறுதி பெறுபேறு வெளியிடப்படும், அதன்பின் உரிய பாடசாலை அதிபர்களிடம் பெறுபேறு அட்டவணை அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.