இனவாதத்தை கிளப்பிய ‘கர்ப்பப் பை யுத்தம் : சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு!
அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, டாக்டர் சன்ன ஜயசுமன உள்ளிட்ட முக்கியமான தலைவர்களின் முன்னிலையில், ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியரான நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக நடைபெற்ற இனவாதமான நடவடிக்கைகளை அலசும் ‘கர்ப்பப் பை யுத்தம்’ எனும் புத்தகத்தை வெளியிட்டார். சிங்களத்தில் ‘ජාතිවාදය ඇවිස්සූ ගර්භාෂයුද්ධය’ என வெளியிடப்பட்ட இந்த நூல், ஏப்ரல் 4ஆம் தேதி கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்ற விழாவில் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய வித்தியாரத்ன பிரிவெனா கல்லூரியின் கலாநிதி தியகடுவ சோமானந்த தேரர், கடந்த காலங்களில் சில மதகுருமார்கள் தங்கள் கருத்துகளின் மூலம் இனவாதத்தை தூண்டியதைக் குறிப்பிட்டார். சமூகத்தில் நிலவும் இந்த விதமான எண்ணங்களை நீக்குவதற்காக கலையும் இலக்கியமும் முக்கியமான பங்காற்றுவதாக அவர் வலியுறுத்தினார். இது போன்ற புத்தகங்கள், அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலதிக கல்வி பணிப்பாளரான வசந்தி திசாநாயக்க, "இனவாதத்தை தோற்கடிப்பதில் கல்வியின் பங்கு" என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில், டாக்டர் ஷாபி மற்றும் அவரது பிள்ளைகள் எதிர்கொண்ட மனவேதனைகள் குறித்து அவர் உருக்கமாக பேசினார். இந்த சம்பவம், டாக்டர் ஷாபியின் பிள்ளைகளின் கல்வியை பெரிதும் பாதித்ததை அவர் நினைவுகூர்ந்தார். ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், தங்களது பொறுப்பற்ற செயல்களால் இனவாத கருத்துக்களை சமூகத்திற்கு பரப்பி, அரசியல் வியாபாரங்களுக்கு காரணமாகியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்காக நாடே, அந்தக் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆண்டன் சார்ள்ஸ் தோமஸ் பாதிரியார், இலங்கையில் மதத் தீவிரவாதம் ஆழமாக வேரூன்றியிருப்பதாக கூறினார். டாக்டர் ஷாபி சம்பவம் இதற்கான உச்ச எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும், பௌத்தம் ஒரு மதமாக அல்லாது தர்மமாக இலங்கைக்கு கிடைத்திருப்பது ஒரு ஆசீர்வாதம் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டத்தரணியான துலான் தசநாயக்க, இனவாதம் செயல்படும் போது நாட்டில் சட்டத்தின் பங்களிப்பை பற்றி உரையாற்றினார். பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், டாக்டர் ஷாபி சிறையில் அடைக்கப்பட்டது, சமீபத்திய வேதனையான நிகழ்வாக அவர் வர்ணித்தார்.
விழாவின் முடிவில் பேசிய டாக்டர் ஷாபி, கடந்த இருண்ட நாட்களை அவர் நினைவு கூர்ந்ததோடு, அந்தச் சூழ்நிலைகளிலிருந்து அவர் எடுத்துக்கொண்ட நல்ல அனுபவங்களை மட்டும் தான் நினைவில் வைத்திருப்பதாக தெரிவித்தார். இந்த புத்தகமும் அவ்வாறான ஒரு நல்ல பக்கம் என்றும், தன்னை குற்றம் செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட சட்ட மற்றும் இயற்கையான தண்டனைகளைப் பற்றிய விவரங்களை உடைய இரண்டாவது பதிப்பும் வெளிவரவேண்டும் என்றும் அவர் கூறினார். இதுபோன்ற நிகழ்வுகள் இனி மீண்டும் நடக்கக் கூடாது எனவும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.