துபாயில் பணி புரிபவர்களுக்கு புதிய சம்பளச் சட்டம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகப்படுத்தல் அமைச்சு, தற்போது வீட்டு பணியாளர்களையும் உள்ளடக்கிய புதிய ஒழுங்கு விதிகளை சம்பளப் பாதுகாப்புத் திட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் படி, வீட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய சம்பளங்கள், அமீரகத்தின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள், பணப்பரிமாற்ற நிலையங்கள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும், பணியாளரின் மாத சம்பளம், அம்மாதத்துக்குரிய சம்பள நாள் முதல் பத்து நாட்களுக்குள் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விதி மீறப்பட்டால், சம்பளத்தை தாமதமாக வழங்கும் தொழில் தருநர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் என்றும், இரண்டு மாதங்களுக்கு மேல் சம்பளத்தை வழங்காத தொழில் தருநர்களின் பதிவு பைல்கள் தற்காலிகமாக முடக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை முழுமையாக அமல்படுத்தும் நோக்கில், அனைத்து தொழில் தருநர்களும் அமைச்சில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.