இலங்கைக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிகள் : ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்
அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, பொருளாதார அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது கடிதத்தில், வரிகள் தொடர்பில் தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வரிகளைக் குறைக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இன்று இரவு 08.00 மணிக்கு அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பரஸ்பர விதிகளை அறிமுகப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வரி விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.