கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரை கடத்தி காணாமல் செய்த சம்பவம் : பிள்ளையான் கைது..!
நேற்று செவ்வாய்க்கிழமை (08) முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மட்டக்களப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாகவே பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிள்ளையான் சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்துக்கான தலைவரான கே.பால சுகுமாரை 2006 ஆம் ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி கடத்திய கும்பல், சிவசுப்ரமணியம் ரவீந்திரனாத்தை உபவேந்தர் பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு அச்சுறுத்தியது.
அதற்கமைய, உபவேந்தர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை எழுத்துப்பூர்வமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்திருந்தார். எனினும், அவரது இராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளாது அவரை கொழும்பில் இருந்து தமது கடமைகளை செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
உபவேந்தருக்கு உயிரச்சுறுத்தல் இருந்தமையால் கொழும்பு, தெஹிவளையில் உள்ள அவரது மகளின் வீட்டிலேயே வசித்து வந்ததுடன், சில தேவைகளுக்காக வெளியில் செல்வதாக இருந்தால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துவிட்டு வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
எனினும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு சென்றுவிட்டு மதிய உணவுக்காக வீட்டுக்கு வருவதாகக் கூறியிருந்த உபவேந்தர் காணாமலாக்கப்பட்டிருந்தார்.
பேராசிரியர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இது பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அன்றைய தினம் மாலை 7 மணியளவில் தெஹிவளை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த விசாரணை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்ட போது, பிள்ளையானின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரினாலேயே பேராசிரியர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கிணங்க, தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையிலேயே நேற்று இரவு பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.