ஒரே ஆண்டில் சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி!


கொழும்பு விசாகா வித்தியாலய மாணவியான ரனுலி விஜேசிறிவர்தன, ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் தோற்றிச் சிறப்பான சித்தியைப் பெற்று, குறிப்பிடத்தக்க சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அவர் மே 2024 இல் நடைபெற்ற 2023 (2024) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, ஆங்கில இலக்கியத்தில் B சித்தியுடன் 8A மற்றும் 1B ஆகிய உயரிய சித்திகளைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 2024 இல் கணிதப் பிரிவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய அவர், 3A சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் 963வது இடத்தையும் பெற்றுள்ளார்.

தனது 10ஆம் வகுப்பை முடிக்கும் போதே உயர்தர பாடத்திட்டத்திற்கும் தயாராகிய ரனுலி, குறித்த வயதுக்குட்பட்டவர்கள் பாடசாலை மூலம் உயர்தர தேர்வுக்குத் தோற்ற அனுமதியில்லாததால், தனியார் பரீட்சார்த்தியாக தேர்வில் பங்கேற்று இந்த வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

இந்நிலையில், 20 வருடக் கல்வி அனுபவம் கொண்ட அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறையில் திறமையான மாணவர்களுக்கு விரைவில் முன்னேற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

மேலும், இலங்கையில் பலர் 26 அல்லது 27 வயதில் பணியில் இணைவதை ஒப்பிட்டு, பிற நாடுகளில் மாணவர்கள் 21 அல்லது 22 வயதிலே தங்களது பட்டப்படிப்பை முடித்து பணியிடத்தில் இணைவதாகவும், எனவே விரைவான கல்வி முறைகள் தனிநபர் வளர்ச்சிக்கும் தேசிய பொருளாதாரத்துக்கும் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.