அரச ஊழியர்கள் குறித்து ஆய்வில் வெளிவந்துள்ள தகவல்
இலங்கையில் அரச மற்றும் அரை - அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 11.5 இலட்சத்தை (1,150,018) தாண்டியுள்ளதாக 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள ஆரம்ப அறிக்கை தெரிவிக்கிறது.
அறிக்கையின் படி, இதில் 50.5% ஆண்களும், 49.5% பெண்களும் அடங்குகின்றனர். கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த ஆண்டு அனைத்து அரச மற்றும் அரை - அரச நிறுவன ஊழியர்கள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, அரச துறையில் 938,763 ஊழியர்களும், அரை - அரசத் துறையில் 217,255 ஊழியர்களும் பணியாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,119,475 ஆக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 46,543ஆல் அதிகரித்துள்ளது.
மேலும், அரச ஊழியர்களில் பெரும்பாலானோர் (59.5%) மத்திய அரசின் கீழ் பணியாற்றுகின்றனர். சுமார் 32,500 அரச மற்றும் அரை - அரச நிறுவனங்கள் இந்த ஆய்வில் உள்ளடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாய்வில் அரை - அரச நிறுவனங்களின் துணை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இராணுவம், கடற்படை, விமானப்படை ஊழியர்கள் மற்றும் தோட்டத் துறை தொழிலாளர்கள் அடங்கவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகையான ஆய்வுகள் எதிர்கால பணியமைப்புக்களுக்குப் பயனளிக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.