1,300 மில்லியன் ரூபாவை ஈட்டிய தேசிய போக்குவரத்து சபை!
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரை, தேசிய போக்குவரத்து சபை சுமார் ரூ.1,300 மில்லியன் வருமானம் ஈட்டியதாக, அதன் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச். ஜயதிலக தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்குத் திரும்புவதற்காக, விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது 24 மணிநேரமும் பேருந்து சேவைகள் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் ‘ஸ்ரீ தலதா வழிபாட்டு’ நிகழ்வுக்காக பயணிக்கும் மக்களின் வசதிக்காகவும், விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, கண்டி-கொழும்பு வீதியில் மட்டும் சுமார் 150 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுகின்றதெனவும் கூறினார்.
மேலும், கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பெறப்பட்ட ரூ.1,300 மில்லியன் வருமானம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.