பண்டிகைக் காலத்தில் முட்டை, கோழி இறைச்சி விலைகள் அதிகரிக்காது! அரசாங்கம் நடவடிக்கை

 


எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளை அதிகரிக்காமல், தற்போதைய விலைகளிலேயே விற்பனை செய்வதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு எவ்விதத் தட்டுப்பாடுமின்றி முட்டை மற்றும் கோழி இறைச்சியை விநியோகிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (23) வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

தற்போதைய விலையிலேயே விற்பனை செய்ய இணக்கம்!

இதன்போது, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலையை அதிகரிக்காமல், தற்போது சந்தையில் நிலவும் விலையிலேயே விற்பனை செய்வதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அதேவேளை, சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஏற்கனவே குறைவடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டதுடன், பண்டிகைக் காலத்தில் எவ்விதத் தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சியை விநியோகிப்பதற்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் உறுதியளித்துள்ளன.

முட்டை உற்பத்தியில் பாதிப்பு!

இதற்கிடையில், கால்நடைத் தீவனங்களுக்கான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு, தீவனங்களின் தரக்குறைவு மற்றும் போதிய விஞ்ஞான அறிவின்மை உள்ளிட்ட காரணங்களால் சிறு அளவிலான முட்டைப் பண்ணையாளர்களின் உற்பத்தி ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவன உற்பத்தியாளர்களைக் கண்காணிக்க நடவடிக்கை!

கால்நடைத் தீவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதுடன், தீவன உற்பத்தியாளர்களைப் பதிவு செய்து, அவர்களது உற்பத்தித் தொழிற்சாலைகளை முறையாகப் பரிசோதிக்குமாறும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு அமைச்சர் வசந்த சமரசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளைக் கட்டுப்படுத்துவதுடன், நுகர்வோருக்குத் தரமான பொருட்களைத் தடையின்றி வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.