இலங்கையில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்! நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில் கூரைமீது பொருத்தப்படும் சூரிய மின்தகடு (Rooftop Solar) திட்டங்களுக்கு அரசாங்கம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, 2027ஆம் ஆண்டின் முற்பகுதியில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆற்றல் துறை நிபுணரும் மின் பொறியியலாளருமான அசோகா அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.

அத்துடன், கூரை சூரிய மின் உற்பத்தி தொடர்பான அமைச்சரவை முன்மொழிவு காணாமல் போயுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கூரை சூரிய மின் உற்பத்தித் திட்டங்களில் புதிய கட்டுப்பாடுகள்

இலங்கையில் கூரை சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புகள், இலங்கை மின்சார சபை எதிர்பார்த்ததைவிட வேகமாக அதிகரித்து வருவதால், அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய கொள்கை மாற்றங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய நடைமுறைகளில் காணப்படும் குறைபாடுகளையும் அசோகா அபேகுணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

கூரை சூரிய மின் உற்பத்திக் கட்டமைப்புகள் பகல் நேரங்களில் அதிகளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. எனினும், அந்த மின்சாரத்தைச் சேமித்து இரவு நேரங்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதில் மின்சார சபை போதிய தயார்நிலையில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும்

இந்த நிலைமை தொடர்ந்தால், எதிர்வரும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டு, மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய சூழல் உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால், மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதிக செலவிலான எரிபொருள் மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமை நாட்டின் பொருளாதாரத்திற்கும் மின்சாரத் துறைக்கும் சாதகமாக அமையாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதன் விளைவாக மின்சார உற்பத்திச் செலவுகள் அதிகரித்து, நுகர்வோருக்கான மின்சாரக் கட்டணங்களும் வேகமாக உயரக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கக்கூடும் என ஆற்றல் துறை நிபுணர் அசோகா அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.