வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்பு: நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் இன்று (25) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு அறிவித்துள்ளது.

இதற்கு இணையாக, அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாக மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படவுள்ளதாக அக்குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு செலவுத் திட்டம் முதல், பல்கலைக்கழகச் சமூகத்தினரின் உரிமைகள் தொடர்ச்சியாகக் குறைக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பேச்சுவார்த்தைகளின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் உருவாகியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், அவற்றைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி, இன்றைய தினம் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இதேவேளை, பிரதான ஒன்பது தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கொழும்புக்கு வருகைதந்து, பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.