இலங்கையில் நிலநடுக்க அபாயம்! நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் கனமழை பெய்யும் காலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் புவியியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்
கனமழையைத் தொடர்ந்து நீர்த்தேக்கங்கள் நீரால் நிரம்பும்போது, அவற்றுக்குக் கீழே காணப்படும் பாறை அடுக்குகளில் அதிகளவிலான அழுத்தம் ஏற்படுகின்றது.
இவ்வாறான அழுத்தங்கள் இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான காரணிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
இதன் விளைவாகப் பாறை அடுக்குகளில் விரிசல்கள் உருவாகுவதுடன், அவற்றில் சிறிய அளவிலான அசைவுகளும் ஏற்படுகின்றன. இத்தகைய அசைவுகள் காரணமாக நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் இவ்வாறான நில அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன.
இதனைக் கருத்திற்கொண்டு, இலங்கையில் மேலும் அதிகளவிலான நில அதிர்வுமானிகளை நிறுவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்து
தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் சுமார் 13 முதல் 14 நில அதிர்வுமானிகள் மாத்திரமே நிறுவப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களே இலங்கையைப் பாதிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, இந்தோனேசியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஆழமற்ற கடற்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டால் மாத்திரமே இலங்கைக்குப் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் பேராசிரியர் அதுல சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
