ஐரோப்பாவை உலுக்கும் அரசியல் கொந்தளிப்பு - அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்
பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மக்கள் போராட்டங்கள், சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நவம்பர் 5-ம் தேதி பிரான்ஸில் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, ஊதிய தேக்கம், வேலைவாய்ப்பு பாதிப்பு, பொதுச் சேவைகள் வீழ்ச்சி மற்றும் 2027 பட்ஜெட் முன்மொழிவுகளை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறவுள்ளது. CFDT, CGT, FO, UNSA, FSU ஆகிய 5 முக்கிய தொழிற்சங்கங்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
பாரிஸில் பாஸ்டில் பகுதியில் இருந்து கொன்கோர்ட் வரை பேரணி திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியேற்ற கொள்கைகள், தேசிய அடையாளம், பொருளாதார சுமைகள் மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் வளர்ச்சி குறித்த விவாதங்கள் ஐரோப்பாவில் தீவிரமடைந்துள்ளன. உக்ரைன் போர், எரிசக்தி நெருக்கடி, பொருளாதார மந்தநிலை ஆகியவையும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
இந்த மாற்றங்கள் பிரான்ஸ், ஜேர்மனியில் நீண்டகாலமாக வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட புலம்பெயர் சமூகத்தினரிடையே எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலைநிறுத்தங்கள், வன்முறை சம்பவங்கள் அவர்களின் அன்றாட வாழ்க்கை, வணிகம் மற்றும் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை பாதிக்கலாம் என கவலை தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஐரோப்பாவில் ஏற்படும் இந்த கொந்தளிப்புகள் சர்வதேச பொருளாதாரம் மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கும் பாடமாக அமைவதாக விமர்சிக்கப்படுகிறது.
