கொழும்பு மாநகர சபை உறுப்பினர் இருவர் இடைநீக்கம்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ். ஸொஹாரா புஹாரி, கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, கட்சி உறுப்புரிமையிலிருந்து உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தியோகபூர்வ கடிதம், கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் அவர்களின் கையொப்பத்துடன் ஸொஹாரா புஹாரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் பாதீட்டு முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கட்சித் தலைமை தீர்மானித்திருந்த நிலையில், அந்த அறிவுறுத்தலை மீறி அவர் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதீட்டை எதிர்க்க வேண்டும் என்ற தீர்மானம், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களால் குழுக்கூட்டத்தில் நேரடியாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அதற்கு முரணாக ஸொஹாரா புஹாரி செயற்பட்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சித் தலைவரின் நேரடி அறிவுறுத்தல்களை மீறி செயற்பட்டது, கட்சியின் ஒழுக்கத்தை மிகக் கடுமையாக மீறும் செயலாக கருதப்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு வார காலத்திற்குள் சத்தியக்கடதாசி மூலம் விளக்கம் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த காலத்திற்குள் விளக்கம் அளிக்கத் தவறினால், கட்சி உறுப்புரிமையை நிரந்தரமாக ரத்து செய்வது உள்ளிட்ட மேலதிக ஒழுக்காற்று நடவடிக்கைகள், முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு மாநகர சபையின் அமர்வுக்கு சமூகமளிக்காத உறுப்பினர் ஷேன் டேனியல் ராம், கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.