நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுப்பு!
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
அதன்படி ,கண்டி மாவட்டத்தில் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 02 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை பதுளை மாவட்டத்தில் ஹாலி எல, பதுளை, பசறை, லுனுகலை மற்றும் வெலிமட பிரதேச செயலாளர் பிரிவுகள்; கண்டி மாவட்டத்தில் டோலுவ பிரதேச செயலாளர் பிரிவு; மாத்தளை மாவட்டத்தில் அம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவு; மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் மதுரட்ட, நில்தண்டஹேன மற்றும் ஹகுரன்கெத பிரதேச செயலாளர் பிரிவுகள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு 01 ஆம் கட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதியிலுள்ள மக்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
