பூஸ்ஸ சிறை நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் - சொத்துக்களுக்கு சேதம்!


பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள 'டி' பிரிவின் கூரையில் ஏறி, சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த கைதிகள் குழுவொன்று  நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பூஸ்ஸ சிறைச்சாலைக்குள் அமைதியின்மையை ஏற்படுத்திய குறித்த கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 'டி' பிரிவின் கூரையில் ஏறி சிறை நிர்வாகத்திற்கு எதிராக கைதிகள் குழுவொன்று போராட்டம் நடத்தியதாகவும், இதன்போது சிறைச்சாலை சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் தலையீட்டைத் தொடர்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இந்த சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.