பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடத் தயாராகும் தனியார் பஸ் ஊழியர்கள்!
மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தனியார் பஸ் ஊழியர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் 20ஆம் திகதி பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும், பஸ்களில் ஏற்படும் சிறிய குறைபாடுகளுக்குக்கூட அதிகாரசபை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகளை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கான சட்ட அதிகாரம் அவர்களிடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
பஸ் ஊழியர்களுக்கு மலசலகூட வசதி, குடிநீர் வசதி, வண்டிகளை நிறுத்துவதற்கான இடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை எனவும், இவ்வாறான வசதிகளை வழங்காமல் ஊழியர்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேவையான வசதிகளை ஏற்படுத்தி, சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு எங்களுக்குப் பிரச்சினை இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போது சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற சூழலில், சிறிய தவறுகளுக்காகவும் சேவைத் தடை விதிக்கப்படுவதாகக் கூறினார்.
இதன் காரணமாகவே பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாண ஆளுநருடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்குப் பின்னர் இது தொடர்பான இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
