நீர் நிரம்பிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தை; மூதூர் – ஷாபி நகரில் சோகம்!


திருகோணமலை மாவட்டம் மூதூர் – ஷாபி நகர் பகுதியில், ஒரு வயதும் எட்டு மாதங்களும் மதிக்கத்தக்க பெண் குழந்தை நீர் நிரம்பிய பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த ஆலியா என்ற குழந்தையே இவ்வாறு அகாலமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டிற்கு அருகே தேங்கியிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில், விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த உடனடியாக குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்கிய பள்ளங்கள் மற்றும் அபாயகரமான நீர் நிலைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு, சிறு பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.