நாட்டில் தீவிரமடையும் டெங்கு - அச்சுறுத்தும் புள்ளிவிபரம்!
இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்றுமுன்தினம் வரையான 9 நாட்களில் மாத்திரம் நாடு முழுவதும் 2,420 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும் தென் மாகாணத்தில் 361 டெங்கு நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 192 நோயாளர்களும் பதிவாகியுள்ளதுடன் சபரகமுவ மாகாணத்தில் 165 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகபடியான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.இதன்படி கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 165 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 393 நோயாளிகளும், களுத்துறை மாவட்டத்தில் 128 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, காலி மாவட்டத்தில் 148 டெங்கு நோயாளிகளும், மாத்தறை மாவட்டத்தில் 162 டெங்கு நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.
இதே நேரத்தில், கண்டி மாவட்டத்தில் 140 நோயாளிகளும், இரத்தினபுரி மாவட்டத்தில் 113 நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மாவட்டங்களில் கவனம் செலுத்த வேண்டிய அளவில் டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
