ஹிக்கடுவ கடலில் நீராடச்சென்று கடல் நீரோட்டத்தில் சிக்கிய வெளிநாட்டவர்கள் மீட்பு!


ஹிக்கடுவ - பன்னங்கொட கடலில் நீராடச்சென்று, கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவரும் சிறுவன் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (26) மதியம் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடற்கரையில் பணியில் இருந்த, ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பிரதி ஆய்வாளர் சிறிமல், பொலிஸ் கான்ஸ்டபிள் திசாநாயக்க மற்றும் துமிந்த ஆகியோர் அவர்களை மீட்டு அடிப்படை முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.

விபத்தில் சிக்கியவர்கள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணும் 14 வயதுடைய சிறுவன் ஒருவரும் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை (26) மாலை, ஹிக்கடுவ - நரிகம கடலில் நீராடச்சென்று நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட இரு வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காக்கும் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் ஏக்கநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் ஹர்ஷ, மிஹிந்து, பண்டாரா மற்றும் திசாநாயக்க ஆகியோர் குறித்த வெளிநாட்டு பிரஜைகளை மீட்டு அவர்களுக்கு அடிப்படை முதலுதவி அளித்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய வெளிநாட்டவர்கள் 33 வயதுடைய ரஷ்ய பிரஜை மற்றும் 67 வயதுடைய பிரித்தானிய பிரஜை என தெரியவந்துள்ளது.