வாகனங்களின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு கோரிக்கை!


சாதாரண மக்கள் பயன்படுத்தும் சிறிய ரக வாகனங்களின் விலையைக் குறைப்பதற்காக அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

குறைந்த எஞ்சின் கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் பின்னணியில், வாகன கொள்வனவு வீதம் கணிசமாக குறைந்துள்ளது. வாகன இறக்குமதிக்காக முன்பதிவு செய்திருந்த பலர், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டதால், தங்களது முன்பதிவுகளை இரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விடுவிக்க தவறினால், “காலமாதம்” (Demurrage) என்ற பெயரில் மாதத்திற்கு 3 சதவீதம் வரி அறவிடப்படுவதாகவும், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் இந்த வரி அறவிடலை இரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், நடுத்தர வர்க்க மக்களின் மோட்டார் வாகன கொள்வனவு கனவு பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர்,

வேகன் (Wagon) ரக வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி 40 இலட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த வரிகளை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.