வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு!


நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையை அடுத்து, ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு பாதுகாப்பாகக் கையாள்வது என்பது குறித்த பொதுமக்களுக்கான வழிகாட்டுதலை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, குடிமக்கள் நனைத்த தாள்களை உலர்த்துவதற்கு அல்லது கட்டுக்களில் இருந்து பிரிப்பதற்கு சூடான நீர், சலவைத்தூள் அல்லது இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின் அழுத்தி, இலத்திரனியல் வெதுப்பி அல்லது எவ்வித அதிக வெப்பத்தை உருவாக்கும் மூலங்களையும் பயன்படுத்த வேண்டாம் எனவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக குடிமக்கள் எந்தவொரு வணிக வங்கியிலும் அவற்றை சமர்ப்பிக்கலாம்.

சேதமடைந்த நாணயத்தின் மதிப்பைப் பாதுகாப்பதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும்,

• நாணயத் தாள்கள் கட்டுகளாக இருக்கும்பட்சத்தில், அவற்றினை கட்டுக்களிலிருந்து பிரித்து இழுக்காதீர்கள்.

• கட்டுகளை அவிழ்த்து, அவற்றை நன்கு உறிஞ்சக்கூடிய பொருளொன்றில் சுற்றி, அறை வெப்பநிலையில் மெல்ல உலரச் செய்யவும்.

• நாணயத் தாள்கள் தனியாகப் பிரியாதவிடத்து, கட்டுகளைக் குளிர்ந்த அல்லது ஓரளவு வெதுவெதுப்பான சுத்தமான நீரில் நனைத்து, பின்னர் இரு முனைகளிலிருந்தும் மிருதுவாக உதறுவதனூடாக நாணயத் தாள்களைத் தளர்த்தவும்.

• ஒவ்வொரு நாணயத் தாளையும் சுத்தமான, உலர்ந்த மேற்பரப்பில் (மென்மையான துணி, காகிதத் துவாய், உறிஞ்சுதாள்) பரப்பி வைக்கவும்.

• நிறமூட்டப்பட்ட அல்லது அச்சுப்பதிக்கப்பட்ட மேற்பரப்புகளைத் தவிர்க்கவும்.

• நாணயத் தாள்களைக் காற்றோட்டமுள்ள இடத்தில் உலரச் செய்யவும், போன்ற அறிவுறுத்தல்களையும் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ளது.