அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோரின் நீர், மின் கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு கடிதம்!
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் டிசம்பர் மாதத்துக்கான மின்சாரம் மற்றும் நீர்க்கட்டணங்களில் ஐம்பது வீதத்தை தள்ளுபடி செய்யுமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
நாட்டில் ஏற்பட்டிருந்த இயற்கை பேரளிவால், குடியிருப்புகள், வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.
வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவுகளால் பலரது இயல்புநிலை பாதிக்கப்பட்டு வருமானங்களும் இழக்கப்பட்டுள்ளன. கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட இந்த பாதிப்பிலிருந்து மக்கள் முற்றாக மீளவில்லை.
எனவே, இம்மாதத்துக்கான (டிசம்பர்) நீர் மற்றும் மின்சார கட்டணங்களில் ஐம்பது வீதத்தை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கவும். நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்னர் முழு நாட்டையும் கடுமையாக பாதித்த மிகப் பெரும் பேரழிவாக இது அமைந்துள்ளது.
வழங்கப்படும் நிவாரணங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது சேதமடைந்த உடைமைகளைச் சுத்தம் செய்து சீரமைக்க அதிக அளவில் தண்ணீரும், மின்சாரமும் தேவைப்படுகிறது.
பொருளாதாரத்திலும்,உள ரீதியிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மீண்டும் வாழ்க்கையை முன்கொண்டு செல்ல உதவும் நோக்கத்தில்,இந்த கட்டணங்களில் ஐம்பது வீதத்தை தள்ளுபடி செய்யுங்கள்.இவ்வாறு அவரது கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
