அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க தீர்மானம்!


அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 5 இலட்சம் பாடசாலை மாணவர்களில் சுமார் 50 வீதமானோருக்கு சீருடைக்கான தேவை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த மாணவர்களுக்கு மேலதிக பாடசாலைச் சீருடைகளை வழங்கும் திட்டத்தின் கீழ் சீருடை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், அதன்படி பாதிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள சுமார் இரண்டரை இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மாகாண மட்டத்தில் இந்த மேலதிகச் சீருடைத் தொகுதியை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் அமைச்சு செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

பாடசாலைகள் டிசம்பர் 16ஆம் திகதி திறக்கப்படவுள்ள நிலையில், சீருடை இல்லாத மாணவர்களுக்கு பொருத்தமான உடையில் பாடசாலைக்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் உரிய ஊழியர்களின் உடை விடயத்திலும் நெகிழ்வான கொள்கையைப் பின்பற்றத் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.