காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அதிகாரிகள் மீது நீரை ஊற்றி அநாகரிகமாக நடந்து கொண்ட 5 பேர் கைது!


காலி மாநகர சபையின் விசேட கூட்டத்தின் போது அமைதியற்ற முறையில் நடந்து கொண்டு, மாநகர சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீர் தாக்குதல் நடத்தி, குற்றவியல் பலாத்காரத்தைப் பிரயோகித்து அரச கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் எதிர்க்கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் காலி மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் பெண் உறுப்பினர் ஒருவர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் அடங்குகின்றனர். 

இவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், சந்தேகநபர்களை இன்று (31) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று (30) மாநகர மேயர் சபையை ஆரம்பித்தவுடன், சபை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. 

கடந்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட தகராறு ஒன்றில், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சபைக்குள் நடந்து கொண்ட விதம் தொடர்பில் இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

மாநகர மேயர் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சபை நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன், அதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதத்தை அறிவித்த போதே, கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் அதிகாரிகள் அமர்ந்திருந்த பகுதியை நோக்கி நீர் போத்தல்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிலைமையை கட்டுப்படுத்த முடியாததால் மேயர் சபையை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அந்த நேரத்திலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலிட்டு அமைதியற்ற வகையில் நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.