நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது.
அதன்படிவடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று இரவு இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியம் நிலவுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில மாவட்டங்களுக்கு மூன்றாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கண்டி, கேகாலை , குருநாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
