டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ ஒத்திவைப்பு!


டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மீட்பு முயற்சிகளைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை மைதானம், விகாரமஹாதேவி பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதான வீதிகள் வழியாக நடைபெறவிருந்த இந்த நிகழ்வு, பொது, தனியார் துறைகளின் பங்கேற்புடன் நான்கு மண்டலங்களைக் கொண்ட ஒரு பெரிய அளவிலான தேசிய கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டது.

சமூகங்களிடையே புரிந்துணர்வை வளர்ப்பதற்கும், மிகவும் இணக்கமான இலங்கையை உருவாக்குவதற்கும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதியால் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் இது முன்மொழியப்பட்டது.

இலங்கையின் பல்லின கலாச்சார அடையாளத்தை எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் பொறுப்பு புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான உணவு கலாச்சாரங்கள், பாரம்பரிய கலைகள், உள்ளூர் தொழில்களின் கண்காட்சிகள், விற்பனை நிலையங்கள் மற்றும் புதிய தயாரிப்பு வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை திட்டங்களில் அடங்கும்.

திட்டத்தை தொடர கடந்த ஒக்டோபரில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது.

எனினும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், முக்கியமான உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ள நிலையில், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் அவசர சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், நாடு தழுவிய கலாச்சார விழாவை நடத்துவது பொருத்தமானதல்ல என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நிலைமை சீராகி, பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் சமாளிக்கக்கூடிய கட்டத்தை அடைந்ததும், ‘இலங்கை தினம்’ திட்டத்திற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்படும்.